search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அதிமுக அரசு கண்டித்து"

    அ.தி.மு.க. அரசை கண்டித்து துண்டு பிரசுரம் விநியோகிக்க முயன்ற சுதர்சனம் எம்.எல்.ஏ. உள்பட 300 தி.மு.க.வினரை போலீசார் கைது செய்தனர்.

    ராயபுரம், அக். 10-

    அ.தி.மு.க. அரசின் ஊழல்களை பட்டியலிட்டு துண்டு பிரசுரங்களாக விநியோகிக்க வேண்டும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

    இதையடுத்து தி.மு.க. வினர் துண்டு பிரசுரங்களை விநியோகித்து வருகின்றனர்.

    வடசென்னை வடக்கு மாவட்ட இலக்கிய அணி சார்பில் திருவொற்றியூர் நெடுஞ்சாலை, வண்ணாரப்பேட்டை மார்க்கெட்டில் துண்டு பிரசுரங்களை விநியோகிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதை இலக்கிய அணி மாநில செயலாளர் இந்திர குமாரி தொடங்கி வைத்தார்.

    இதில் மாதவரம் சுதர்சனம் எம்.எல்.ஏ., இலக்கிய அணி மாவட்ட அமைப்பாளர் ரெயின்போ விஜயகுமார் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    அப்போது இந்திர குமாரி கூறும்போது, “மு.க. ஸ்டாலினை முதல்- அமைச்சர் ஆக்கும்வரை தி.மு.க. இலக்கிய அணி ஓயாது. அ.தி.மு.க. ஆட்சியை அ.தி.மு.க.வினரே கவிழ்த்து விடுவார்கள். மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியபடி அ.தி. மு.க.வின் ஊழல் பட்டியலை பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களாக விநியோகித்து வருகிறோம்“ என்றார்.

    பின்னர் மாதவரம் சுதர்சனம் எம்.எல்.ஏ. தலைமையில் தி.மு.க.வினர் பொது மக்களிடம் துண்டு பிரசுரங்களை விநியோகித்தனர். அப்போது வந்த வண்ணாரப்பேட்டை போலீசார், “துண்டு பிரசுரங்கள் விநியோகிக்க போலீசாரிடம் அனுமதி பெறவில்லை. இதனால் துண்டு பிரசுரங்களை விநியோகிக்க கூடாது. எனவே அனைவரும் கலைந்து செல்லுங்கள்” என்று தெரிவித்தனர்.

    ஆனால் தி.மு.க.வினர் தொடர்ந்து பிரசுரங்களை விநியோகிக்க முயன்றனர். இதையடுத்து சுதர்சனம் எம்.எல்.ஏ. உள்பட 300 தி.மு.க.வினரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி அழைத்து சென்றனர்.

    ×